இந்த நூலில் பல எளிய நல்ல மருந்துகள் கூறப்பட்டு உள்ளது இதில் இருந்து எங்கள் குடும்பத்தில் பல மருந்துகளை செய்து கொடுத்து நல்ல பலன் கண்டுள்ளோம். இந்த நூல் இன்னும் மூன்று பாகங்கள் உள்ளன அவற்றையும் வெளியிடுகிறேன் இதன் உண்மைப்படிவம் pdf வடிவில் மின் நூலாகவும் வெளியிடுகின்றேன். இதன் மூலம் நூறு ஆண்டுகளுக்கு முன் மருத்துவத்தின் விபரங்களை அறியலாம்
இதனை என் தந்தைக்கும் தாத்தாவுக்கும்
காணிக்கையாக்குகிறேன்
முகவுரை
----------------------------
இரஞ்சித போதினி என்னும் பத்திரிகையை ஏறக் குறைய
ஆறு வருடங்களாக நடத்தி வருகையில் ஐரோப்பிய யுத்தம் ஆரம்பித்து விட்டதால் அதைத்
திடீரென்று நிறுத்திவிட வேண்டியதாயிற்று. அனால் நான் வெளியாக்கக் கருதியிருந்த பல
விஷயங்கள் வெளி வராது இருப்பதைப் பற்றி மிக்க வியசநிக்கின்றேன். தற்சமயம்
வைத்தியமே பிரதானமாகக் கையாடி வருதலின், ஆயுர்வேத பண்டித சிகாமணிகள் பலரின் அனுபோக
வைத்திய முறைகளையும் ஆங்கில பண்டிதர்கள் கையாடி வரு முறைகளில் யாவரும் சமயோசிதமாய் எளிதில் செய்து
கொள்ளக் கூடிய சுளுவான பல முறைகளையும் புஸ்தக ரூபகமாக மாதம் ஒருமுறை
வெளியிடலாயினேன். மற்றப் பாகங்கள் மாதந்தோறும் கிரமமாய்வெளிவரும்.
யாவரும்
எளிதில் செய்து கொள்ளக் கூடிய கைகண்ட வைத்திய முறைகள் உள்ளவர்கள் அவற்றை எழுதி
அனுப்பினால் அவர்களின் விலாசத்துடன் அம்முறைகளைப் பிரசுரஞ் செய்வோம்.
தென்காஞ்சி
இரங்கோன்
25/4/1918 S. சாமிவேல்.
பொருள் அட்டவணை
---------------------------------
1. அமிர்த சஞ்சீவி குடிநீர்
2. வெட்டைக்கு மருதோன்றியிலை
3. ஷயரோகத்திற்கு லேகியம்
4. குஷ்டத்துக்கும், மேகரோகங்களுக்கும் வெள்ளைக் கோழிக்கறி
5. ஒருத்தலையிடிக்கு ஒட்டக விட்டை நசியம்
6. நேத்திர சிந்தாமணி மெழுகு
7. சகல வியாதிகளுக்கும் நல்ல கஷாயம் ( டில்லி சந்நியாசியார் முறை )
8. வயிற்றுப் பொருமலுக்குத் தேங்காய் லேகியம்
9. கிராணிக்குக் கஞ்சா லேகியம்
10. கிராணிக்கு வாழைரச சாதிக்காய்
11. சுவாச காச முதலான இருமல்களுக்கு வெள்ளை எருக்கலம் பூ கூழ்
12. சகல ரோகங்களுக்கும் சர்ப்பராஜேந்திர பூபதி லேகியம்.
13. ரச, செம்பு, குங்கிலிய பிலாஸ்திரி
14. சித்தாத்தி எண்ணெய்
15. வாதம், வாய்வு, காமாலை, சூலைக்குத் தேங்காய் லேகியம்
16. பித்தம், மேகச்சூடு, வெள்ளை, நீர்ச்சுருக்கு, லிங்கப்புன், சூதகவாய்வு, கண்நெரிவு, கைகால் எரிவு இவைகளுக்குக் கடுக்காய் லேகியம்
17. சகல காந்திகளுக்கும் மூல ஆதாரத்தில் உள்ள சூட்டிற்கும் அதனால் உண்டாகும் வயிற்றுப் போக்குக்கும் கொத்தமல்லி கஷாயம்
18. வயிற்றுக் கடுப்புக்கும் வயிற்றுளைச்சலுக்கும் வில்வப் பிஞ்சுக் கசாயம்
19. பித்தம் நாற்பதுக்கும் கருணைக் கிழங்கு லேகியம்
20. மேகார் ஜாது சேங்கொட்டை லேகியம்
21. மேகம், நீரிழிவுக்கு ஆவாரம் பட்டை கஷாயம்
22. சகல கரப்பானுக்கும் எண்ணெய்
23. கெர்ப்பம் இல்லாதிருக்கிறவர் கெர்ப்பம் தரிக்கவும், சூதகவாய்வுக்கும், பூச்சிக்கும் ஓர் நல்ல கஷாயம்
24. பித்தத்தால் உண்டான ரோகங்களுக்கும், கைகால் எரிவுக்கும் சஞ்சீவி சூரணம்
25. காசம், குன்மம், கரப்பான், சூலை, குஷ்டம், வாய்வு, நெஞ்செரிவு. தேகஎரிவு, பித்தவெடிப்பு, தாதுநஷ்டி (நஷ்டம்)இதுகளுக்குத் தாளிசபத்திரி சூரணம் (சேகு அல்லிசாய்பு முறை )
26. பித்த சுரத்துக்குக் கஷாயம்
27. பழைய சுரம், விட்விட்டு வருகிற சுரங்களுக்குக் கைகண்ட கஷாயம்
28. காய்ச்சலில் வாந்தி அரோசிகம் தாகங்கன்டால் அவைதீரக் கஷாயம்
29. மூல முளைக்குவெள்ளைப் பாஷாண வெளிப்பூச்சு மருந்து
30. கண்ணில் இரத்தம் நீங்கக் கைகண்ட ஒளஷதம்
31. காய்ச்சல் கட்டிக்குக் குடிநீர்
32. காய்ச்சல் கட்டிக்கு வேறொரு முறை
33. மேகரோகங்களுக்குக் கெந்தக பஸ்பம்
34. சகலவிதக் கட்டிகளும் பழுத்து உடைந்து ஆறுவதற்கும், முள் தைத்து வீக்கம் உண்டாகி வருத்தப் படுகிறவர்களுக்கும் நாகக்கள்ளி போல்டீஸ்
35. குஷ்டத்திற்குச் சுண்ணம்
36. குழந்தைகளுக்கு மாந்தஎண்ணை
37. காசம், ஷயம், பிரமேகம், பித்தம், குன்மம், கண்காந்தால், நீரெரிவு முதலியவற்றிற்கு லேகியம்
38. பித்தம், பைத்தியக் கிரியைகளுக்கு நெல்பாணி லேகியம்
39. குன்மத்திற்குச் சங்கு திராவகம்
40. எவ்விதச் சிரங்குகளையும் ஆற்றும் எண்ணெய்
41. பெரும்பாட்டுக்கு
42. வெண்குஷ்டத்திற்கு வாலரசமெழுகு
43. கல்லடைப்பு, நீரடைப்பு,செருப்பு முதலானவைகளுக்கு வெள்ளரிப் பிஞ்சு பக்குவம்
44. சகல சுரத்திற்கும் கைகண்ட கஷாயம்
45. கிராணி, அஜீரணம், இரைச்சல் முதலியவைகளுக்குச் சுக்கு பக்குவம்
46. மேகவூரல், தினவு, சொரிவு முதலானதுகளுக்கு மேலே பூசுகிற எண்ணெய்
47. பித்தம், மேகம், உஷ்ணம், கபால வாய்வு கனத்த மண்டையிடி, சயித்தியம், பயித்தியத்திற்கு அருகம் வேர்த் தைலம்
48. தேள், நட்டுவாக்காலி விஷத்திற்கு மருந்து
49. எலி கதிக்குத் துளசி இலை
50. வாய்வுக்கும் பொருப்பு அடைப்புக்கும், மேற்பூச்சு மருந்தும் கஷாயமும் ( செல்லாம்பிள்ளை முறை )
---------------------------------
1. அமிர்த சஞ்சீவி குடிநீர்
2. வெட்டைக்கு மருதோன்றியிலை
3. ஷயரோகத்திற்கு லேகியம்
4. குஷ்டத்துக்கும், மேகரோகங்களுக்கும் வெள்ளைக் கோழிக்கறி
5. ஒருத்தலையிடிக்கு ஒட்டக விட்டை நசியம்
6. நேத்திர சிந்தாமணி மெழுகு
7. சகல வியாதிகளுக்கும் நல்ல கஷாயம் ( டில்லி சந்நியாசியார் முறை )
8. வயிற்றுப் பொருமலுக்குத் தேங்காய் லேகியம்
9. கிராணிக்குக் கஞ்சா லேகியம்
10. கிராணிக்கு வாழைரச சாதிக்காய்
11. சுவாச காச முதலான இருமல்களுக்கு வெள்ளை எருக்கலம் பூ கூழ்
12. சகல ரோகங்களுக்கும் சர்ப்பராஜேந்திர பூபதி லேகியம்.
13. ரச, செம்பு, குங்கிலிய பிலாஸ்திரி
14. சித்தாத்தி எண்ணெய்
15. வாதம், வாய்வு, காமாலை, சூலைக்குத் தேங்காய் லேகியம்
16. பித்தம், மேகச்சூடு, வெள்ளை, நீர்ச்சுருக்கு, லிங்கப்புன், சூதகவாய்வு, கண்நெரிவு, கைகால் எரிவு இவைகளுக்குக் கடுக்காய் லேகியம்
17. சகல காந்திகளுக்கும் மூல ஆதாரத்தில் உள்ள சூட்டிற்கும் அதனால் உண்டாகும் வயிற்றுப் போக்குக்கும் கொத்தமல்லி கஷாயம்
18. வயிற்றுக் கடுப்புக்கும் வயிற்றுளைச்சலுக்கும் வில்வப் பிஞ்சுக் கசாயம்
19. பித்தம் நாற்பதுக்கும் கருணைக் கிழங்கு லேகியம்
20. மேகார் ஜாது சேங்கொட்டை லேகியம்
21. மேகம், நீரிழிவுக்கு ஆவாரம் பட்டை கஷாயம்
22. சகல கரப்பானுக்கும் எண்ணெய்
23. கெர்ப்பம் இல்லாதிருக்கிறவர் கெர்ப்பம் தரிக்கவும், சூதகவாய்வுக்கும், பூச்சிக்கும் ஓர் நல்ல கஷாயம்
24. பித்தத்தால் உண்டான ரோகங்களுக்கும், கைகால் எரிவுக்கும் சஞ்சீவி சூரணம்
25. காசம், குன்மம், கரப்பான், சூலை, குஷ்டம், வாய்வு, நெஞ்செரிவு. தேகஎரிவு, பித்தவெடிப்பு, தாதுநஷ்டி (நஷ்டம்)இதுகளுக்குத் தாளிசபத்திரி சூரணம் (சேகு அல்லிசாய்பு முறை )
26. பித்த சுரத்துக்குக் கஷாயம்
27. பழைய சுரம், விட்விட்டு வருகிற சுரங்களுக்குக் கைகண்ட கஷாயம்
28. காய்ச்சலில் வாந்தி அரோசிகம் தாகங்கன்டால் அவைதீரக் கஷாயம்
29. மூல முளைக்குவெள்ளைப் பாஷாண வெளிப்பூச்சு மருந்து
30. கண்ணில் இரத்தம் நீங்கக் கைகண்ட ஒளஷதம்
31. காய்ச்சல் கட்டிக்குக் குடிநீர்
32. காய்ச்சல் கட்டிக்கு வேறொரு முறை
33. மேகரோகங்களுக்குக் கெந்தக பஸ்பம்
34. சகலவிதக் கட்டிகளும் பழுத்து உடைந்து ஆறுவதற்கும், முள் தைத்து வீக்கம் உண்டாகி வருத்தப் படுகிறவர்களுக்கும் நாகக்கள்ளி போல்டீஸ்
35. குஷ்டத்திற்குச் சுண்ணம்
36. குழந்தைகளுக்கு மாந்தஎண்ணை
37. காசம், ஷயம், பிரமேகம், பித்தம், குன்மம், கண்காந்தால், நீரெரிவு முதலியவற்றிற்கு லேகியம்
38. பித்தம், பைத்தியக் கிரியைகளுக்கு நெல்பாணி லேகியம்
39. குன்மத்திற்குச் சங்கு திராவகம்
40. எவ்விதச் சிரங்குகளையும் ஆற்றும் எண்ணெய்
41. பெரும்பாட்டுக்கு
42. வெண்குஷ்டத்திற்கு வாலரசமெழுகு
43. கல்லடைப்பு, நீரடைப்பு,செருப்பு முதலானவைகளுக்கு வெள்ளரிப் பிஞ்சு பக்குவம்
44. சகல சுரத்திற்கும் கைகண்ட கஷாயம்
45. கிராணி, அஜீரணம், இரைச்சல் முதலியவைகளுக்குச் சுக்கு பக்குவம்
46. மேகவூரல், தினவு, சொரிவு முதலானதுகளுக்கு மேலே பூசுகிற எண்ணெய்
47. பித்தம், மேகம், உஷ்ணம், கபால வாய்வு கனத்த மண்டையிடி, சயித்தியம், பயித்தியத்திற்கு அருகம் வேர்த் தைலம்
48. தேள், நட்டுவாக்காலி விஷத்திற்கு மருந்து
49. எலி கதிக்குத் துளசி இலை
50. வாய்வுக்கும் பொருப்பு அடைப்புக்கும், மேற்பூச்சு மருந்தும் கஷாயமும் ( செல்லாம்பிள்ளை முறை )
------------------------------------------------
ஓம்
அரிய ஒளஷத முறைகள்
முதலாம் பாகம்
---------------
1. அமிர்த சஞ்சீவி குடிநீர்
10 - களஞ்சி முற்றின மருதோன்றி வேரை நிழலில் உலர்த்தி 150 களஞ்சி நல்ல தண்ணீரில் ஊறவைத்து ஐந்திலொரு பங்காகக் காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு ஒரு வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் இரு வேளையும் 40 – நாள் 80 – சந்தி சாப்பிட குஷ்ட நோய் தீரும்.
இந்தக் கஷாயம் 10 – களஞ்சியாக 10 – நாளைக்குச் சாப்பிட சொத்தையான நகம் விழுந்து போய் புதிய நகம் முளைக்கும். காமாலை, கல்லடைப்பு, உதிரச்சிக்கல் நீங்கும். வயிற்றில் மரித்த பிண்டம் வெளியாகும். குன்மம் வேறோடு அறும்.
இதில் அரைக் களஞ்சி தினந்தோறும் வாய் கொப்பளிக்க வாய்வேக்காடு, வாய் நாற்றம், நாக்கு வெடிப்பு, வாய்ப் புண்ணும் தீரும். இதனிலையை ஆமணக்கிலைச் சாற்றில் அரைத்துப் பூச கால்வலி மாறும், நெற்றியில் பூசக் கண்வலி நீங்கும்
மேற்கண்ட இலையுடன் படிகாரஞ் சேர்த்து அரைத்துப் பூசி வந்தால் மேகப்படை, கருந்தேமல், நரம்பிழுப்பு, கால்வலி முதலியவை தீரும்.
மேற்கண்ட இலையை சூரத்து நிலாவிரையுடன் சேர்த்து அரைத்துத் தலையில் பூசிவர மயிர் மிகவும் கருத்து வளரும்
--------------------------------------------------------------------------------------------------
சாமிவேல் வைத்திய சாலை, தென்காஞ்சி, இரங்கோன்
அரிய ஒளஷத முறைகள்
மேற்படி இலையை நன்றாய்ச் சதைத்து நல்லெண்ணெய்யில் கலக்கி அடுப்பேற்றி காய்ச்சி, இலை பொரிந்து கருகுமுன் எண்ணெய் சிவந்த நிறமானவுடன் இறக்கி வைத்துக்கொண்டு தலைக்கு தடவி வருவதுடன், அதே எண்ணெயைத் தலைக்கு தேய்த்து தலைமுழுகி வர மயிர் கறுத்துச் செழித்து வளரும்.
மேற்படி இலையை அறைத்து ஆறாத புண்களில் பூசிவர ஆர்ப்போகும். பாதங்களில் உண்டாகும் வெடிப்புகளுக்குத் தடவ சுகமாகும்.
மேற்படி இலையை அறைத்து மூன்று நாள் காலையில் குடித்துக் கடும் பத்தியம் இருக்க மேகவெள்ளை, வெட்டை முதலியவை தீரும்
மேற்படி புஷ்பத்தை நல்லெண்ணையில் எரித்து பூச கால்வலி, குடைச்சல் வாதம் நீங்கும். சிரசைப்பற்றிய ரோகங்களும் மேற்படி எண்ணெயில் தீரும்.
2 – வெட்டைக்கு
மருதோன்றி இலை இரண்டு கைப்பிடி கொண்டு வந்து அதை நீராகாரத் தண்ணீர் விட்டு நன்றாயிடித்து துணியில் வைத்து நன்றாய்ப் பிழிந்து எடுத்த சாறு ஒரு சேரங்கை வெங்காயச்சாறு ஒரு சேரங்கை நல்லெண்ணெய் இரண்டு சேரங்கையாக இவ்வளவையும் ஒன்றாய்ச் சேர்த்து, கொஞ்சம் பனை வெல்லம் போட்டு வைத்துக்கொண்டு காலையில் ஸ்நானம் செய்து மேற்படி மருந்தை காலை தோறும் மூன்று சந்தி கொடுத்து வர எவ்வளவு நாட் சென்ற வெட்டையும் தீரும். கைகண்டது. கடும் பத்தியம் மிருக்க வேண்டும்.
--------------------------------------------------------------------------------------------------
முதலாம் பாகம்
-----------------------------------------------------------------------------------------
குறிப்பு –
இந்த மருந்தைச் சாப்பிட்ட சிலருக்கு மேற்படி வியாதி சில நாட்களுக்குப் பின் திரும்ப தலை காட்டுவது உண்டு. அப்படி நேரிடாமல் வியாதியின் வேரை முற்றிலும் களைந்து விட விருப்பமுள்ளவர்கள் மேற்படி மருந்தை நிறுத்தி நாலு நாள் ஆறப்போட்டபின் ஐந்தாம் நாள் நமது ஸ்நானத் தைலத்தைத் தேய்த்து அப்பியங்கன ஸ்நானம் செய்து விட்டு ஆறாம் நாள் முதல் சில நாட்களுக்கு சாமிவேலின் பிரமேக நிவாரணக் குளிகையைச் சாப்பிட்டு வர பூரண சுகமுண்டாகும்.
------------------------------------------
3. ஷய ரோகத்திற்கு லேகியம்
சுக்கு, திப்பிலி, அறத்தை, அக்கிரகாரம், செவ்வீயம், கோட்டம், சிறுதேக்கு, கற்கடக சிங்கி, மரமஞ்சள், சிறுநாகப்பூ, கிராம்பு, வால்மிளகு, தாளிசபத்திரி, நெல்லிமுள்ளி, பூலாங்கிலங்கு, தான்றிக்காய், அதிமதுரம், வென்குந்திரிகம், மல்லி வகைக்கு களஞ்சி – 3 , வெட்ப்பாலையரிசி, சாதிக்காய், மாச்சக்காய், லவுங்கப்பட்டை, சாதிப்பத்திரி வகைக்கு 3 களஞ்சி, கடுக்காய் பலம் – 10 ½ , இண்டு, சங்கு, தூதுவளை, துளசி, ஆடாதோடை, குளத்து ஆமை ஓடு, முள்எலித் தோல், மேதித்தோல், பூநாகம், நிலக் கரையான் வகைக்கு பலம் 1 ½ , தூதுவளை வேர் பலம் 100, கண்டங்கத்திரி வேர் பலம் 100 இரண்டையும் சமூலமாகத் தரித்து சிதைத்து ஒரு மிடாவில் போட்டு 5 – மரக்கால் தண்ணீர் விட்டு மேற்படி சரக்கோடு கடுக்காயை இளம்சீலை துணியில் தளர்த்தியாக முடிச்சு கட்டிப் போட்டு கசாயம் ஒரு படியானவுடனே மேற்படிக் கடுக்காயை எடுத்து விதை நீக்கி காயவைத்து இடித்து தூளாக்கி மேற்படி கசாயத்துடன் சேர்த்து வடிகட்டிக் கொண்டு மேல் கண்ட மருந்துகளையும், பச்சிலைகளையும் பொன்னிறமாக வறுத்து இடித்து வஸ்திரகாயம் (துணியில் வடிகட்டிக்) செய்து அடுப்பில் சட்டி வைத்து ஒரு படி நெய் விட்டு இரண்டு பலம் பனங்கற்கண்டு நுணுக்கிப் போட்டு கொதிக்கும் போது தூளைத் தூவி கிண்டி தென் விட்டு இறக்கி லேகியம் செய்து கொண்டு நெல்லிக்காய் பிரமானம் நாளொன்றுக்கு இரு நேரம், அரை மண்டலம் சாப்பிட அடியிற் கண்ட வியாதிகள் தீரும்.
தீரும் வியாதிகள் :- அஸ்தி சுரம், சயம், ஈளை, இளைப்பு, கபக் கட்டு, கபவாயு, மந்தாரகாசம், மலக்கட்டு, சலக்கட்டு, உத்திர வெப்பு, கெர்ப்பவிப்புருதி, சயசூலை, உளமாந்தை, சுரமாந்தை தீரும்.
பத்தியம் – உப்பு, புளி, பசுவின் நெய், மோர் கூட்டவும். கவுச்சி ஆகாது, அரிதார பஸ்பம் வைத்து சாப்பிட்டால் மிக நலம். கைகண்டது. வி.ப. வா. முறை
--------------------------------------------------------------------------------------
4. குஷ்டத்துக்கும் மேகரோகங்களுக்கும்
வேப்பிலையும், நாக்குளிப் பூச்சியும் நன்றாயரைத்து அத்தோடு பனைவெல்லமும் சேர்த்து முப்பது பாக்களவு உருண்டை செய்து நல்ல வெள்ளைக் கோழிக்குக் கொடுத்தால் தூவலெல்லாம் உதிர்ந்து போம். மேற்ப்படி கோழியைப் புளியிடாமல் கறி பண்ணிச் சாப்பிடத் தீரும். இந்தப்படி மூன்று கோழி சாப்பிட்டால் ரெம்பவும் நல்லது. அகபத்தியம் நீக்கிக் கொள்ள வேண்டியது.
--------------------------------
5. ஒருத்தலையிடிக்கு
ஒட்டகத்தின் விட்டையைச் சுட்டு சாம்பல் எடுத்து அதில் வெள்ளெருக்கலம் பால்விட்டுக் குழப்பிக் காயவைத்து நன்றாய்த் தூளாக்கி நசியமிடத் தீரும். கைகண்டது
----------------------------------------------------- .
6. நேத்திர சிந்தாமணி
சுக்கு, மிளகு, வால்மிளகு, காயம், பூண்டு இவற்றில் வகைக்கு பலம் – 1 வாங்கி பசுவின் நெய் விட்டு வறுத்து ஒன்று இரண்டாய்த் தட்டியரைத்து இரண்டு மஞ்சாடி அபினையும் கலந்து ஒரு பித்தளைச் சட்டியில் போட்டு நாலு
படி தண்ணீர் விட்டுக் கலக்கி அடுப்பில் வைத்துக் காய்ச்சவும் ஒன்று அல்லாது ஒன்றைப் படியாக வற்றவும் வேறுஒரு பித்தளைச் சட்டியில் வடிகட்டி மெழுகு பதமாகக் காய்ச்சி எடுத்து டப்பியில் வைத்துக் கொண்டு முலைப் பாலில் உரைத்து நேத்திர வியாதி சகலத்திற்கும் போடவும்
------------------------------------------ .
7. சகல வியாதிகளுக்கும் நல்ல கஷாயம்
கருப்பு அல்லது வெள்ளைக் காணம் சேர் படி ½ கிராம்பு எடை ரூ 1, சிறு ஏலக்காய் எடை ரூ 1 கொடிக்கள்ளி எடை ரூ 8 ஆக இவ்வளவும் ஒரு பானையில் போட்டு 5 படி தண்ணீர் விட்டு ஒரு சாதி விறகாக எரித்து ¾ படி சலம் இருக்கும் போது அனலை நிறுத்திவிடவும். பின் அந்தி சந்தி ஒரு ஒயின் கிளாஸ் பிரமாணம் மூன்று நாளைக்கு கொடுக்கவும். மேற்படி கஷாயப்பானைக்கு கொஞ்சம் அனல் போட்டுக் கொண்டே வரவேணும். வாதம் 80 – ம் சூலை 18 – ம், குஷ்டம், மேகத்தடிப்பு, யோனிப்புற்று, லிங்கப் புற்று,ஈளை,இளைப்பு முதலானதும் தீரும். இதற்கு வெள்ளாட்டு இறைச்சி, நெய், வறுத்தஉப்பு, இதெல்லாம் மிளகு நீர் போல் செய்து சாதத்தோடு ஆறுநாள் சாப்பிடவும். பசுவின் மோரும் சோறும் ஈர வெங்காயத்துடன் சாப்பிடலாம். இறைச்சி சாப்பிடாதவர்கள் மோரும் சோறும் ஈரவெங்காயத்துடன் சாப்பிடலாம். (டில்லி சந்நியாசி முறை, இது நல்ல முறையென்று ரெம்பவும் உறுதியாச் சொல்லிருக்கிறார்.)
------------------------------------------------------
8 – வயிற்றுப் பொருமலுக்கு
ஒரு முற்றின தேங்காயை வாங்கி திருவிப் பாலெடுத்து மேற்படி பாலில் ஒரு நிதனாமாக வெள்ளைப் பூண்டு உரித்துப் போட்டு அத்தோடு ஒருதுண்டு சுக்கையும் அரைத்துப் போட்டு கடைந்து அடுப்பில் வைத்து லேகியம் போலக் கிண்டிவைத்து பாக்களவு அந்தி சந்தி ஐந்து நாள் சாப்பிடத் தீரும்
------------------------------------------------
9 – கிராணிக்கு
கோழிமுட்டை வெள்ளைக் கருவை ஒரு சட்டியிலிட்டு இரண்டு கடுக்காய்த் தூளையும் அதில் அரைவாசி கஞ்சாத் தூளையும் போட்டு லேகியம் போல் கிண்டி எடுத்து முழுமையும் கொடுக்கத் தீரும். இந்தப்படி ஆறுவேளை கொடுக்கத் தீரும்.
------------------------------------------
10 – கிராணிக்கு வேறு முறை
வாழைமரத்து அடித்தூரில் கொஞ்சம் வெட்டித் தேவையான சாதிக்காய்களை அதில் வைத்து வெட்டிய வாழைத்தண்டை அதின் மேல் வைத்து சீலை மண் செய்து நாற்பதாம் நாள் மேற்படி சாதிக் காய்களை எடுத்து வைத்துக் கொண்டு கிராணிகளுக்குமுதல் நாள் அரைக்கையைத் தூள் பண்ணி வெண்னையிலாவது பச்சைத் தண்ணீர்லாவது கொடுக்கிறது. ஒரு நாளைக்கு ஒருநாள் பிரமாணத்தை குறைத்துக் கிராணி சவுக்கியப் படுந்தன்னையும் கொடுத்து வர வேண்டியது.
----------------------------------------------------------
11 - சுவாச காசம் முதலான இருமல்களுக்கு
வெள்ளை எருக்கலம்பூ கொஞ்சமும், நல்ல மிளகு கொஞ்சமும் ஒரு நிதானாமாய் எடுத்து இஞ்சிச் சாற்றில் நன்றாய் அரைத்து அல்லது இஞ்சிச் சாற்றில் மேற்படி அரைத்த மருந்துகளை கரைத்து கூழ் போல் கிண்டி அந்தி சந்தி சாப்பிட்டு வரத் தீரும்.
-------------------------------------
12 – சகலரோகங்களுக்கும் சர்ப்பராஜேன்ந்திர பூபதிலேகியம்
1)பால் சாம்பிராணி பலம் ½ , 2) வெள்ளைக் குங்கிலியம் பலம் ½ , 3) ஏலரிசி பலம் ½, பேரீச்சங்காய் பலம் 1, இதில் 1,2,3 சரக்குகளை நன்றாய்ச் சூரணித்து மேற்படி சூரணத்தை பேரீச்சங்காயைச் சேர்த்து நன்றாய் இடித்து எடுத்துக் கொண்டு கோதுமை மாவு பலம் 2 நன்றாய் பிசைந்து எடுத்துக் கொண்டு அடையாகத் தட்டி அதில் மேற்படி இடித்த சரக்குகளை அடையில் மேற்படி சூரணத்தை வைத்து மடக்கி மூடி ஒரு வாயகலமுள்ள சட்டியில் பசுவின் பாலில் பாதித் தண்ணீர் விட்டு மேற்படி பாத்திரத்தில் விட்டு வேடுகட்டி வேட்டின் பேரில் மருந்தை வைத்து மேற்படி மருந்துக்கு மேல் ஒரு ஈரத்துணி துண்டு போட்டு மேல் சட்டி மூடி ஒரு நாழிகை வரையும் அவித்து எடுத்து மேல்க் கவசமுள்ள மாவை எடுத்துப் போட்டு மேற்படி சரக்குகளை உரலில் போட்டு 8 சாமம் நெய் கொஞ்சம் கொஞ்சம் விட்டு இடிக்க வேண்டியது. இடித்து எடுத்து புன்னைக் காய் அளவு மண்டலம் கொள்ள வேண்டியது. தொடர்ந்து சாப்பிடாமல் எட்டு நாள் சாப்பிட்டு எட்டு நாள் ஆறப்போட்டு (சாப்பிடாமல் நிறுத்தி ) அடுத்த எட்டு நாள் சாப்பிடத் துவங்க வேண்டியது. இந்தப்படி 40 – நாள் சாப்பிட்டுவர சகல கிரானியும் சகல வியாதியும் தீரும் பத்தியம் இல்லை. அகப் பத்தியம் மட்டும்
----------------------------------------------------
13 - பிளாஸ்திரி
கடை ரசம் ஒரு திக்கலும் செம்பை ராவின தூள் ஒரு திக்கலும் கரு ஊமத்தங் கொழுந்து இலைச்சாற்றில் நன்றா அரைத்துக் கொண்டு கருங் குங்கிலியத்தை நன்றாய்ப் பவுடர் பண்ணி வைத்துக்கொண்டு மேலே கண்ட அரைத்த சரக்கில் மேற்படி குங்கிலியதூளைத் தூளைத் தூவி ஒரு நிதானமாக பசுவெண்ணெய்யும் சேர்த்து நாலு சாமம் நன்றாய் அரைத்து எடுத்து வைத்துக்கொண்டு எவ்விதமான ரணங்களிலும் ரணம் தீரும்.
-------------------------------------------
14 – சித்தாதிஎண்ணெய்
பெருங்காயம், வெண்காரம், எருக்கலம் பால், இந்துப்பு கருஞ்சீரகம், திப்பிலி, நேர்வாளம் வகைக்கு பலம் 1, வெள்ளுள்ளி சேர் படி 1, விதை நீக்கிய கடுக்காய் சேர் படி 1, சிற்றாமணக்கு எண்ணெய் சேர் படி 1, தேங்காய்ப்பால்சேர் படி 8, வேலிப்பருத்தி சார் படி 8, மேற்படி சரக்குகளை மேற்படி சார் விட்டு மைபோல் அரைத்து கலக்கி மெழுகு பதத்தில் காய்ச்சி வடித்துக் கொண்டு களஞ்சி 1 கொடுக்கலாம் பத்தியம் இல்லை.
இதனால் தீரும் வியாதிகள் ---
கவுசை, சிரசு ரோகம் சகலதும், சூலை, நீராம்பல்கட்டி, நீரழிவு, நீர்மலக்கட்டு, சொறி, ரணம், பெரும்பாடு, நாவடைப்பு, கிரந்தி, மேகத் தடிப்பு, வாயிற் புண், கண்நெரிவு, ஊது வாய்வு, விக்கல், சத்தி, அரையாப்பு, சிரங்கு, அனலை, தாகம், பயித்தியம் கெர்ப்பசூலை, வழி, காதடைப்பு, பூச்சு வெட்டு, குணமம், சூதக வெட்டை, பவுந்திரம் இவை தீரும்.
-------------------------------------
15 – தேங்காய் லேகியம்
நீர் வற்றின (முற்றிய) தேங்காய் பலம் 4 ½ , மிளகு, திப்பிலி, சுக்கு, வகைக்கு பலம் 1, வெள்ளுள்ளி உரித்தது பலம் 4 ½ தேங்காயை சிறுகக் கீறி ஐந்து நாள் உலர்த்தி மருந்தும் தேங்காயும் சேர்த்து இடித்து பொடி செய்து புதுக் கலயத்தில் வைத்துக் கொண்டு திரிகடிப் பிரமாணம் தின்று வர வேண்டியது.
இப்படி 8 – நாள் சாப்பிட வாதம், வாய்வு திரட்சி கெர்பசூலை, கெர்பவிப்புருதி, சூலை, குடல் வாய்வு, கண்டமாலை, காமாலை, கடுவிஷம், கன்னச் சூலை, கன்னோசை, இவைதீரும். மருந்து சாப்பிடும் காலத்தில் காலையிலும் மாலையிலும் வெந்நீரில் ஸ்நானம் செய்யவும். (வி.ப.வா முறை)
16 – பித்தம், மேகச்சூடு, வெள்ளை, நீர்ச்சுருக்கு, லிங்கப் புண் (ஆண்குறி) சூதகவாய்வு, கண்நெரிவு, கைகால் எரிவு, இவைகளுக்கு கஷாயம் (பேதியாகும்)
பிஞ்சுக் கடுக்காய் 10,கடுக்காய் 2, கடுகுரோகினி, முந்திரிப்பழம், ரோசாப்பூ, சீமை நிலவாகை வகைக்கு இரண்டு சல்லி எடை. இவ்வளவும் கஷாயம் செய்து வற்ற வைத்து ஒரு ஆளுக்கு 1 ½ ஒயின் கிளாஸ் கஷாயம் காலையில் கொடுக்கவும். ஒருநாள் விட்டு ஒருநாள் மூன்று சந்தி கொடுக்கலாம். கஷாயம் கொடுக்கும் போது இரண்டு சல்லி எடை இந்துப்பு போட்டுக் கொடுக்க வேண்டியது. புளி, கரப்பான் பதார்த்தங்கள், கடுகு, நல்லெண்ணெய் நீக்கிக் கொள்ளவேண்டியது. உப்பும் வெள்ளாட்டு இறைச்சியும் சேர்த்துக் கொள்ளலாம். ( இது ரெம்பவும் நல்ல முறை, டில்லி சந்நியாசியார் அனுபவம்)
17 – சகல காந்திகளுக்கும் மூலாதாரத்தில் உள்ள சூடு முதலானதுக்கும்
கொத்தமல்லி 2 படியை 7 தடவை தண்ணீரில் நன்றாய் கழுவி எடுத்து 4 படி தண்ணீர் விட்டு 2 படியாக வற்றவைத்து ஒரு சிறு தேயிலைக் கோப்பையளவு கஷாயம் எடுத்து அதில் கொஞ்சம் பனை போட்டுச் சாப்பிட்டு வர மூலாதாரச் சூடும் மேற்படி சூட்டின் பேரிலுள்ள வயிற்றுப் போக்கும் தீரும்.கைகண்டது.
-----------------------------------
18 - வயிற்றுக் கடுப்புக்கும் வயிற்று உளைச்சலுக்கும்.
கொத்தமல்லி, இருவேலி, கோரைக் கிழங்கு, இஞ்சி, வில்வப் பிஞ்ச்சுக்காய் இவைகளை ஒரு நிதானமாகக் எடுத்து கஷாயஞ் செய்து பணங்கற்க்கண்டு ஒரு நிதான மே தூள் பண்ணி போட்டு சாப்பிட்டு வரத் தீரும்.
---------------------------------------------------------
19 – பித்தம் – 40 க்கு மருந்து
சிறு கீரைவேர் பச்சையாக பலம் 5, அவுரிவேர் பச்சையாக பலம் 5, இந்த இரண்டும் ஒன்றாய் தட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு 14 படி தண்ணீர் விட்டு ஒரு படியாக வற்ற வைத்து அதை ஒரு பாத்திரத்தில் இருத்தெடுத்து கருணைக் கிழங்கு பலம் 5 பச்சையாக தோலோடு சீவிப்போட்டு நன்றாய் வேகவைத்து இறக்குஞ் சமயம் 1 ¼ பலம் பனை வெல்லம் போட்டு லேகியம் போல் நன்றாய் கடைந்து ஒரு நெல்லிக்காய்ப் பிரமாணம் அந்தி சந்தி சாப்பிடத் தீரும்.
------------------------------------------------------
20 – மேகார் ஜாது லேகியம்
காட்டாமணக்கின் வேர்ப்பட்டை பலம் – 10, சேங்கொட்டை பலம் 10, இவ்விரண்டையும் தட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு 16 படி வேறு பத்தியமில்லை. தண்ணீர் விட்டு ஒரு படியாக வற்ற வைத்து கஷாயம் இறுத்துக் கொண்டு 5 பலம் பனை வெல்லம் போட்டு லேகியம் போல் கிண்டி இறக்கிக் கொண்டு நெல்லிக்காய்ப் பிரமாணம் கொடுக்கவும். இச்சா பத்தியம்
------------------------------------------
21 – ஆவாரம் பட்டைக் கஷாயம்
ஆவாரம் பட்டை பலம் 10, கல்சுண்னாம்பு பலம் 5, இவ் இரண்டையும் ஒரு பானையில் போட்டு 8 படி தண்ணீர் விட்டு 8 நாள் வரையும் ஒவ்வொரு நாளும் நன்றாய்க் கலக்கி வைத்து 8 ம் நாள் புதிய பானை 5 வாங்கி அடிப்பானையில் ஏலம், சந்தனக் கட்டை, வால்மிளகு, கசகசா இவ்வளவும் வகைக்கு 2 களஞ்சி பொடி பண்ணி ஒரு வெள்ளைத் துணியில் பொட்டலம் கட்டி பழைய பானையில் போட்டு மேற்படி பானையின் மேல் 4 பானைகளை அடுக்கி ஐந்தாவது பானையில் மேற்படி கஷாயத்தை விட்டு மேற்ப்படி பானையின் வாயைத் துணியினால் இறுகக் கட்டிப்போட மேற்படி கஷாயம் கீழ்ப் பானையில் இறங்கி விடும். மேற்படி கஷாயத்தை போத்தல்களில் (பாட்டில்களில் ) நன்றாய் அடைத்து வைத்துக் கொண்டு ஒரு கிளாஸ் கஷாயத்தில் கொஞ்சம் சீனியும் ஒரு எலுமிச்சம்பழ சாறும் பசுவின் பால் ஆக இதுகளை சேர்த்து சாப்பிட்டு வர மேகம் 21 –ம் போகும். அன்டச்சுன்னம், அப்பிரேக் பஸ்பம் இது களைச் சேர்த்துச் சாப்பிட நீரழிவைக் கேட்கும்.
--------------------------------------------
22 – சகல கரப்பானுக்கும் எண்ணெய்
ஈருள்ளிச் சாறு, மஞ்சள் சாறு, கஸ்தூரி மஞ்சள், சங்கங் குப்பி, கழுதை லத்தி,செம்பொன்னெரிஞ்சி, சிற்றாமணக்கு எண்ணெய் வகைக்கு படி ¼ கருஞ்சீரகம், கார்போகரிசி, ஏலம்,வெந்தயம், நற்பவளம் வகைக்கு களஞ்சி ஒன்று காய்ச்சி இறக்கி நெல் புடத்தில் வைத்திருக்க நீண்ட காலம் இருக்கும். குழந்தைக்கு 15 நாளைக்கு ஒரு முறை முக்கால் துட்டு எடை கொடுக்கவும். அப்பால் நன்றாய் குளிப்பாட்டவும்.
---------------------------------------
23 - கெர்ப்பமில்லா திருக்கிறவர்களுக்கும் சூதக வாய்வுக்கும் பூச்சிக்கும் இதொரு நல்ல கஷாயம்
காயம் களஞ்சி 2, நேர்வாளம் களஞ்சி ½, இந்துப்பு களஞ்சி 1, பொரிகார பஸ்பம் (வெண்கார) களஞ்சி 1 இந்த நாலு மருந்துகளை நுணுக்கி வரிக்கொமட்டிக் காய்க்குள் நன்றாய் திணித்து வெட்டிய துண்டை பொருத்தி மேலே துணி சுற்றி அதின் பேரில் எருமைச் சாணத்தை கனக்கப் பூசி குக்கிட புடம் காய் வெந்து போகப் போட்டு மேற்படி காயை கருகிப் போகாமல் எடுத்து பிளிந்து மேற்படி சாரோடு ஒரு களஞ்சி ஆமணக்கு எண்ணெய் சேர்த்துக் கலக்கி கொடுக்க நன்றாய் பேதியாகும். நன்றாய் வாந்தியாகும். அதிகப்பட்டால் வசம்பை சுட்டுக் கொடுக்க தீரும் அதற்கும் நிற்காவிட்டால் இளநீர் கொடுக்கவும்.நின்று போகும். மேற்படி மருந்து சூதகம் கண்ட நான்காம் நாள் முதல் ஆறாம் நாள் வரையும் ஆளின் சக்திக்குத் தக்கது ஒருநேரமும் கொடுக்கலாம். இரண்டு நேரமும் உடல் பலத்தைப் பொறுத்து கொடுக்கலாம். 7 ஆம் நாள் ஸ்நானம் பண்ணிப் போடவேண்டியது. அன்று இரவு பள்ளியறை சேரும் படி செய்யலாம். அதே மாதமே கெர்ப்பம் உண்டாகும். கெர்ப்பம் ஆகாமல் இருந்தால் தொடர்ந்து மூன்று மாதம் கொடுக்கலாம்.
---------------------------------------------------
24 – சஞ்சீவி சூரணம்
சீரகம், அதிமதுரம், மகரப்பூ, கருஞ்சீரகம் சன்னலவங்கப் பட்டை, சதகுப்பை வகைக்கு பலம் 1, மல்லி பலம் 6, சீனாக் கற்கண்டு பலம் 12 ஆக இவ்வளவும் சூரணம் செய்து வ்ருகடிப் பிரமாணம் சாப்பிட்டுவரப் பித்தத் தாலுன்டான ரோகங்களும், கைகால்எரிவு முதலானதும் தீரும். மேற்படி சூரணத்தோடு ஒரு பலம் சீந்தில் மா (சிந்தில்சர்க்கரை) சேர்த்து கொண்டால் மிகவும் நல்லது. ( வெள்ளூர்ப்பிள்ளை முறை )
---------------------------------------
25 – தாளிசபத்திரி சூரணம்
தாளிசபத்திரி 40 களஞ்சி, திகடுகு, திரிபலாதி, சீரகம், கருஞ்சீரகம், ஏலம், ஜாதிக்காய், ஜாதிப்பத்திரி, கிராம்பு, சிறுதேக்கு, அதிமதுரம், சிறுநாகப்பூ, லவங்கப்பட்டை, இலவங்கப்பத்திரி, செவ்வீயம், வாய்விளங்கம், சித்தரத்தை, வால்மிளகு, ஓமம், குரோசாணி ஓமம், கோரோசனை, தேசாபரம், அக்கிரகாரம், கொத்தமல்லி, முந்திரிகைப் பழம், பேரீட்சம்பழம், கூகைநீர், நிலப்பனைக் கிழங்கு, அமுக்கிறாங்கிழங்கு, முத்தக்காசு, விலாமிச்சம் வேர், வெட்டிவேர், தூதுவேளை வேர், கண்டங்கத்திரி வேர், நெய்தல் கிழங்கு (தாமிரைகிழங்கு) நெல்பொரி வகைக்கு களஞ்சி 1 மேற்படி மருந்துகளை சூரிய ஒளியில் காயவைத்து, உலர்த்தி சூரணம் செய்து சீனி களஞ்சி – 40 பொடித்து சேர்த்து வேளைஒன்றுக்குத் திருகடிப் பிரமாணம் தேன், இஞ்சிச்சாறு, மாதுளம் பழச்சாறு இதுகளில் சேர்த்துச் சாப்பிடவும்.
தீரும் வியாதிகள் –
காசம், வாந்தி, அரோசியம்,நெஞ்செரிவு, தேகஎரிவு, குன்மம், பித்தவெடிப்பு, தாது நஷ்டம், புகைச்சல், கண்மயக்கம், புண் சிரங்கு, கரப்பான், சூலை,குஷ்டம், வாய்வு தீரும் ( சேகு அல்லி சாயபு முறை )
-------------------------------------------
26 – பித்த சுரத்துக்கு கஷாயம்
ஏலம், அதிமதுரம், வெட்டிவேர், விலாமிச்சம் வேர், கலங்கொம்பு (மான் கொம்பு) இலுப்பைபூ, நன்னாரிவேர், ஆடாதொடைஇலை, பேய்ப்புடல், கோரைக்கிழங்கு, சீந்தில் தண்டு, பற்படாகம், முன்னைவேர், வில்வவேர், கொத்தமல்லி, நெல்லிமுள்ளி, நீர்முள்ளி ஆக வகை ஒன்றுக்கு பலம் அரைக்கால் வீதம் போட்டுக் கஷாயம் செய்து மூன்று நாள் ஆறு பொழுது சாப்பிடத் தீரும்.
-----------------------------------------
27 - பழைய சுரம் விட்டு விட்டு வருகிற சுரங்களுக்கு கைகண்ட கஷாயம்
சுக்கு, மிளகு, சித்தரத்தை, வாய்விளங்கம், கொத்தமல்லி, குறிஞ்சிவேர், பேய்ப்புடல் இவ்வளவும் வகைக்கு களஞ்சி ஒன்று எடுத்து அரைப்படி தண்ணீர் விட்டு கஷாயம் செய்து மாகானிப் படியாக வற்ற வைத்து ஐந்து சந்தி கொடுக்கத் தீரும். இது நல்ல கஷாயம்.
-----------------------------------------------------
28 - காய்ச்சலில், வாந்தி, அரோசிகம், தாகம் தீர
சுக்கு, சீரகம், கொத்தமல்லி, குருந்தொட்டி வேர், நெல் பொரி வகைக்கு களஞ்சி ஒன்றாக எடுத்து இவ்வளவையும் அரைப்படி தண்ணீரில் போட்டு மாகானிப் படியாக வற்ற வைத்து காலையில் மட்டும் மூன்று நாள் மூன்று சந்தி கொடுக்கத் தீரும்.
------------------------------------
29 – மூல முளைக்கு
வெள்ளைப் பாசானம் ஒருபங்கும், பூங்காவி அரைப்பங்கும் இரண்டும் நன்றாய் தூள் செய்து குண்டு மணியை நீர் விட்டு உரைத்து மேற்படி தூள் ஒரு நிதானமாக மேற்படி பசையில் கலந்து மத்தித்து துணியில் தடவி முளைகளைச் சுத்தி போட்டு வர வேண்டியது. ஒரு நாளைக்கு ஒரு தரமாக ஐந்து நாள் போட்டு வர வேண்டியது. மேற்படி துணியை எடுத்து மருதுணி போடும் போது பழைய துணியை நன்றாய் நனைத்து இதமாக எடுத்து வர வேண்டியது. ஆறாம் நாள் எருமைத் தயிரில் சாதத்தைப் பிசைந்து மூன்று நாளைக்கு தினம் இரண்டு தரம் கட்டி வர வேண்டியது.
--------------------------------------------
30 – கண் இரத்தப் படலத்துக்கு
ஒரு களஞ்சி நவச்சாரத்தை ஒரு போத்தல் நல்ல தண்ணீரில் போட்டுக் கலக்கி அதன் தெளிவு நீரை கண்ணில் ஒன்று இரண்டு சொட்டு விட்டு வர தீரும். கைகண்டது. (கு.பெ. கொ. செய்த முறை)
-----------------------------------------------------
31 – காய்ச்சல் கட்டி
அன்னபேதி ஒரு களஞ்சி ஒரு போத்தல் தண்ணீரில் போட்டு ஒருநாளைக்கு மூன்று தரம் ஒவ்வொரு ஒயின் கிளாஸ் குடித்துவர தீரும்.
---------------------------------------------
32 – காய்ச்சல் கட்டிக்கு இதொரு முறை
ஒரு போத்தல் எலுமிச்சம் பழச்சாற்றில் 11 பால் சோவியும், மூன்று ஊசியும் போட்டு இரண்டு நாள் வைத்து ஒரு நாளைக்கு மூன்று தரம் ஒவ்வொரு ஒயின் கிளாஸ் வீதம் குடித்து வரத் தீரும்
-----------------------------------
33 – கெந்தக பஸ்பம்
ஆவாரையிலைச் சாற்றில் கொஞ்சம் பசுவின் பால் விட்டு மேற்படி கெந்தகத்தை ஐந்து தரம் உறுக்கிச் சாய்த்து மேற்படி கெந்தகத்தை ஒரு பானையில் அரைப்படி சாம்பல் போட்டு அதின் பேரில் கெந்தகத்தை வைத்து. அதன் பேரில் சாம்பல் அரைப்படி போட்டு அடுப்பேற்றி மேற்படி பானையைத் திறந்து வைத்து அடுப்பு எரிக்கும் போது ஒரு துரும்பை (வைக்கோல் போன்ற தாவர காய்ந்த இலைகள் ) போட்டால் மேற்ப்படி துரும்பு கருகும் போது மேற்படி கெந்தகத்தை எடுத்து குப்பை மேனி இலையை அரைத்துக் கவசம் செய்து முழப்புடம் போட பஸ்பமாகும். அப் பஸ்பத்தை பசு வெண்ணையில் கொடுக்க மேக ரோகங்கள் தீரும்.
-------------------------------------------------
34 - சகலவிதக் கட்டிகளுக்கும் மருந்து
நாகக்கள்ளியைக் கொண்டுவந்து மேலே இருக்கிற முள்ளைப் போக்கித் தணலில் புதைத்து நன்றாய் வெந்தபின் நன்றாய் பிளந்து ஒரு பாதியை ரணத்தில் கட்டிகளில் வைத்துக் கட்டி மறுநாள் மறு பாதியையும் வைத்துக் கட்ட எவ்விதக் கட்டிகளும் பழுத்து சீக்கிரத்தில் உடைந்து ஆறும் முள் தைத்த அதனால் வீங்கி வருத்தப் படுகிறவர்களுக்கு இதை இரண்டு தடவை வைத்துக் கட்ட முள்ளும் வந்து ரணமும் ஆறும்.
---------------------------------------------------------------
35 – குஷ்டத்திற்கு சுண்ணம்
செம்பு சல்லிக்கு புளியம் இலையில் எலுமிச்சம்பழம் சார்விட்டு அரைத்து மூன்று தடவை சோத்துக்குள் வைத்துக் 100 எருவில் புடம் போட்டு எடுத்துக் கொண்டு வெள்ளைக் கண்டங்கத்திரி இலையை அரைத்து புடம் போட்டு எடுத்துக் கொண்டு வெள்ளைக் கண்டங்கத்திரி இலையை மேற்படி சல்லிக்குக் கவசம் செய்து கெஜபுடம் சுண்ணம் ஆகும். வெள்ளீயத்துக்கு 10 – 1 கொடுக்க நீர்வாங்கும். குஷ்டங்களனைத்தையும் எடுத்து விடும். கைகண்டது. துருஷ் செம்பு எடுத்து தகடு தட்டி உப்பும் செங்கல் தூளும் தங்கத்திற்கு போடுகிறது போல் போட்டு 2 அல்லது 3 புடம் போட வர்ணம் நன்றாக இருக்கும். 4 க்கு 1 தங்கம் சேர்க்கவும். உள்ளே அரிசி எடை கொடுக்கவும் பத்தியம் உப்பில்லாமை பால் சீனியோடு சோறு சாப்பிடலாம் 7 வேளை.
---------------------------------------------------
36 – குழந்தைகளுக்கு மாந்த எண்ணெய்
சுக்கு, மிளகு,திப்பிலி, காயம், கடுக்காய், மஞ்சள், பூடு, ஓமம், வசம்பு, இஞ்சி, அக்கராகாரம், அரத்தை, சிவதை, ஜாதிக்காய், மாச்சிக்காய். வகைக்கு களஞ்சி 2. ரசகற்பூரம் களஞ்சி 1, தேங்காய் எண்ணெய் அரைப்படி, விளக்கெண்ணெய் அரைப்படி, கற்பூர வெற்றிலை, வேப்பங் கொழுந்து, கொழுஞ்சி வேர்த்தோல், முள்ளு முருங்கைக் கொழுந்து,வேலிப்பருத்தியிலை, வெள்ளருகுயிலை, நொச்சியிலை, பெருந்தும்பையிலை, சிருதும்பையிலை, ஆடாதொடையிலை, கண்டங்கத்திரி இலை, இண்டு, தூதுவேளை, துளசி, குட்டித்தக்காளி, மன்ஜ்சனத்திக் கொழுந்து, பிரமியிலை, சிறுபுள்ளடிஇலை இவற்றின் சாறு வகைக்கு கால்படி வீதம் ஒன்று சேர்த்து மெழுகு பதமாக காய்ச்சி எடுத்துக் கொண்டு 5 துளி தாய்ப்பாலில் கொடுக்க வயிற்றோட்டம் நிற்கும். இஞ்சிச் சாற்றில் கொடுக்க மாந்தம் பொருமல் சுரம் இருமல் இளைப்பு கப சரம் தோஷம், அஜீரணம் தீரும்.
------------------------------------------------------------
37 – காசத்துக்கு லேகியம்
மாதளம் பழச்சாறு படி ¼, கீழ்க்காய்நெல்லிச்சார் படி ¼,சிறுகீரைச்சார் படி ¼, பசுவின் நெய் படி ½, திரிகடுகு, திரிபலை, பாக்கு, பச்சைக்கல்நார், கோட்டாம், நற்சீரகம், ஏலம், பெருஞ்சீரகம், சித்தரத்தை, அதிமதுரம், குங்கமப்பூ,கோரோசனை வகைக்கு பலம் 1 தேத்தான் விதை 100, தூதுவேளையிலை பலம் 1 ½ , இவைகளை இடித்து நெய்யில் கலக்கிக் காய்ச்சி பருவத்தில் சர்க்கரை பலம் 1 கற்கண்டு பலம் 1 சேர்த்து பாகு செய்து பதத்தில் சூரணத்தை தூவிக் கிண்டி இறங்கி தேன்படி ¾ விட்டு பிசரி காலை, மாலை பத்து நாள் சாப்பிடவும்.
தீரும் வியாதிகள் –
ஷயம், காசம், சிலேற்பனம் 96, பிரமேகம் 21, அஸ்திசுரம், பித்தம், வாதசுரம் 60, தாது எரிவு, கண்காந்தால், நீரெரிவு, குன்மம் 8, ஒக்காளம், விக்கல் முதலிய பற்பல வியாதிகளுக்கு கொடுக்கலாம்.
-------------------------------------------------
38 – பித்தத்திற்கு நெல்பாணி லேகியம்
கோஷ்டம், கோரோசனை, ஏலம், சீரகம், அதிமதுரம், சூடம், தாளிசபத்திரி, இலவங்கப்பட்டை, பேய்ப்புடல், தான்றிக்காய் வகைக்கு பலம் 1, சிறுபயறு பலம் 2, நெல் பொரி பலம் 2, திரிகடுகு பல்ம் 1, பொடி செய்து சீனி பலம் 1 ½ , முந்திரி பலம் 1 ½ , நெல்லிக்காய் சாறு படி ¼ விட்டுக் கிண்டி 1நேரத்துக்கு 1 நெல்லிக்காய் அளவு காலை மாலை கொடுக்க பித்தம் நாற்பது பயித்திய கிரியை 14 ம் தீரும். இதை வைத்தியர் அனுப் பானத்துடன் கொடுக்க அநேக வியாதிகள் தீரும்
------------------------------------------
39 – சங்க திராவகம்
வெடியுப்பு பலம் 6, சீனாக்காரம் பலம் 3, அன்னபேதி பலம் 7 ½, துருசு பலம் 2, கறியுப்பு பலம் 2, நமச்சாரம் பலம் 1, பொரிகாரம் பலம் ½, பூநீர் பலம் 1, இந்துப்பு பலம் 3 இவைகளில் அன்னபேதியும், துருசுமட்டும் சட்டியில் போட்டு வறுத்து வழமை போல் போத்தல் (பாட்டில்) வைத்து திராவகமிறக்கிக் கொள்ள வேண்டியது. இது நல்ல முறை.குன்மத்தை நன்றாய்க் கேட்கும்.
----------------------------------------------------------------
40 – எவ்வித சிரங்குகளையும் ஆற்றும் எண்ணெய்
ஏலம், விலாமிச்சம்வேர், சீரகம், மிளகு, கோட்டம், கொத்தமல்லி, மஞ்சள், கால்துட்டு வெற்றிலைச்சாறு, 10 – எலுமிச்சம்பழச்சார், அரைத் தேங்காயின் பால் ஆக இவ்வளவையும் பதமாகக் காய்ச்சி வடித்துப் போட்டு வரத் தீரும்.
-------------------------------------------
41 – பெரும் பாட்டுக்கு
அத்திமரப்பட்டை, கருவாழைப்பூ, செவ்விளநீர்ப்பூ, முத்தக்காசு, பசுவின் பால் ஆக இவ்வளவும் வகைக்கு ஒரு சேரங்கை சேர்த்து மூன்று சந்தி அல்லது ஐந்து சந்தி சாப்பிட்டுவர எப்பேர்ப்பட்ட பெரும் பாடும் தீரும்.
--------------------------------------------------------
42 – வெண்குஷ்டத்துக்கு
வாலரசம் களஞ்சி 1 எடுத்து குழி அம்மியில் விட்டு சங்கம் (நற்சங்கன்) பழச்சார் விட்டு மூன்று நாள் அரைக்க நல்ல மெழுகாகும். குன்று மணிப் பிரமாணம் 10 நாள் 20 பொழுது சாப்பிட்டு வரத் தீரும். (இது தரோஸ் முறை)
---------------------------------------
43 - கல்லடைப்பு, நீரடைப்பு, கடுப்பு
வெள்ளரிப் பிஞ்சுக்காயை துளைத்து, வெடியுப்பு களஞ்சி ஒன்று வைத்து அடைத்து நாலு சாமம் சென்றெடுத்து நன்றாய்க் கசக்கி அறுத்துச் சாப்பிடவும். நீரெடுக்கு. இதற்குப் பத்தியம் கோழிக் குஞ்சு குடலும் தூவலும் நீக்கி துண்டு துண்டாக வெட்டி ஒரு பானையில் போட்டு இரண்டு படி தண்ணீர் விட்டு அதில் கடுகு,கொத்தமல்லி, ஓமம், சுக்கு வகைக்கு பலம் ஒன்று மேற்ப்படி தண்ணீரில் போட்டு ஒருபடியாக இறக்கி வைத்து சிறுகச் சிறுக கொடுக்கவும். தங்கி இருந்த கல்லு முதல் விழும். உப்பு புளி ஆகாது.
------------------------------------------------------
44 – சகல சுரத்துக்கும் கஷாயம்
பொடுதலை,கோரைக்கிழங்கு, கடுக்காய், பற்படாகம் வகைக்கு ¼ பலம் தண்ணீர் படி 4 விட்டு ( மருந்து சரக்குகளை ஒன்றிரண்டாய் இடித்து கொள்ளவும் ) கொதிக்கவைத்து ¼ படி யாகச் வற்ற வைத்து அரைக்கால் படி தேன்விட்டுக் கொடுக்கச் சகல சுரமும் தீரும். வயிற்றோட்டம் உள்ள சுரத்துக்கு கடுக்காய் பாதி (அரைக்கால் பலம் ) போட்டுக் கொள்ளவும் கைகண்டது.
-----------------------------------------------------
45 – கிராணி, அஜீரணம், இரைச்சலுக்கு கபாடம்
ஒரு சுக்குக்கு உப்பை அரைத்துப் பொதிந்து கொள்ளவும், ஒரு சுக்குக்கு குப்பை மேனியை அரைத்து பொதிந்து கொள்ளவும், ஒரு தேர் சுக்குக்கு தைவேளையை அறைத்துப் பொதிந்து கொள்ளவும். மூன்றையும் உமி தணலில் போட்டு, பொதிந்து கருகினபின் எடுத்து உதிர்த்துப் போட்டு மூன்றையும் தேன் விட்டரைத்து மெழுகு பதத்தில் வழித்து எடுத்துக் கொண்டு களற்சிக்காய் அளவு சாப்பிட்டு வர பொருமல், மந்தம், இரைச்சல் தீரும். பத்தியம் இல்லை.
---------------------------------------------------------
46 - மேகவூரல், தினவு, சொறி,முதலானதுக்கு மேலே பூசுகிற எண்ணெய்
விளக்கெண்ணெய் படி மாகாணியில் கார்போக அரிசி களஞ்சி 2 நுணுக்கி மேற்ப்படி எண்ணையில் போட்டு நிழலில் வைத்து மறுநாள் எடுத்து கழுதை லத்தியை அரைவாசி வேக வைத்து கரியாகும் போது அம்மியில் வைத்து அரைத்து நுணுக்கி எண்ணையில் போட்டு முன் எண்ணையில் போட்டு இருந்த கார்போக அரிசியை அரைத்து மேற்படி எண்ணெயில் கலக்கி காலையில் உடலுக்கு தேய்த்துக் கொண்டு சாயரட்சை (மாலையில்) அரப்பு போட்டுத் தேய்த்து பச்சைத் தண்ணீரில் (குளிர்ந்தநீரில்) ஸ்நானம் மூன்று பொழுது செய்து வரவேண்டியது கைகண்டது.
-----------------------------------------------------
47 – பித்தத்திற்கு தைலம்
அருகவேர் பலம் 10 கொண்டு வந்து ஒரு பானையில் போட்டு 8 படி தண்ணீர் விட்டு தீ எரித்து ஒரு படி தண்ணீர் ஆகும் படி வற்ற வைத்து இறுத்துக் கொண்டு அதில் நல்லெண்ணெய் படி 1 விட்டு, வெட்டிவேர் பலம் 1, கார்போகாரிசி பலம் 1, கோஷ்டம் பலம் 1 ஆக மருந்து 3 யையும் அரைத்து எண்ணெயில் போட்டு நீரில்லாமல் காய்ச்சி பதத்தில் வடித்துக் கொண்டு முழுக் வேண்டியது.
தீரும் வியாதிகள் ----
கனத்த மண்டையிடி, சிரசில் பித்தம், மஞ்சள் நிறத்த் மூத்திரம், மகத்தான மேகம், உஷ்ணம்,கப்லா வாயு, சயித்தியம், பயித்தியம் தீர்ந்து போகும். பத்தியம் புகையிலை, புளி தள்ளவும்.
------------------------------------------------
48 – தேள், நட்டுவாக்காலி விஷத்துக்கு
வெள்ளை பாஷனத்தை சிறு நீரிலறைத்து பிள்ளைப் பாலில் அரைத்துச்பூசத் தீரும். கைகண்டது.
----------------------------------------------
49 – எலிகடிக்கு
துளசியிளையைக் கசக்கிக் கடிவாயில் வைத்துக் கட்டி பச்சைத் தண்ணீரில் ஒரு நாழிகை வைக்கத் தீரும்
------------------------------------------
50 - வாய்வுக்கும் பொருமல் அடைப்புக்கும்
- வாய்விளங்கத்தை முருங்கை இலைச்சாற்றில் நன்றாக அரைத்துக் கொதிப்பித்துப் பூசத் தீரும் மேற்கண்ட பூச்சுக்கு தீராதிருந்தால் சுக்கு, ஒற்றைப் பூண்டு முருங்கைப் பட்டை,நறுக்கு மூலம்,வெள்ளைச் சாரணைவேர் ஆக இவ்வளவும் ஒரு நிதானமாக எடுத்து கஷாயம் செய்து மூன்று சந்தி கொடுக்கத் தீரும். (செல்லம் பிள்ளை முறை)





புத்தகம் கிடைக்குமா?
ReplyDeleteஆதவன் சித்தாஸ்ரம் வைத்திய சாலை,
ReplyDeleteசென்னை - மதுரை - திருச்சி - பாண்டிச்சேரி - கரூர்
சித்த மருத்துவர் அருண் சின்னையா அவர்களின் ஆதவன் சித்தாஸ்ரம் வைத்திய சாலை,
சர்க்கரை, சொரியாசிஸ், மூட்டு வலி, பக்கவாதம், ஆஸ்துமா, உடல் பலவீனம்,
ஆண்மைக்குறைவு, குழந்தையின்மை, பால்வினைநோய்கள், விறைப்பின்மை
விந்து முந்துதல், உயிரணுக்கள் குறைபாடு, பெண்களுக்கு உண்டாகும் மாதவிடாய்கோளாறுகள்
நீர்க்கட்டி,சினைப்பைக்கட்டி போன்ற பிரச்னைகளுக்கு மருத்துவ ஆலோசனை பெறலாம்...
எங்களது சித்த மருந்துகளை வாங்க http://www.drarunchinniah.in/
தொடர்புக்கு:
ஆதவன் சித்தாஸ்ரம் வைத்திய சாலை,
சென்னை - மதுரை - திருச்சி - பாண்டிச்சேரி - கரூர்
+91.8608400035, +91.8608400041
Aadhavan Siddha Groups +91.8754473544